Pages

Monday, August 5, 2013

0102 - PEI KUTHIRAI VEERAN: MUTHU COMICS # 68

நண்பர்களே முதலில் அனைவருக்கும் தாமதமான "நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்".


நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போவது முத்து காமிக்ஸின் வெளியீடு எண் 68 - சிஸ்கோ கிட் & பாஞ்சோ-வின் "பேய்க்குதிரை வீரன்".

கதை:





நம் "காமிக்ஸ் உலக ரோமியோ" சிஸ்கோ கிட்டிற்கு ஒரு நாள் கடிதம் ஒன்று வருகிறது. அதில் ரோமனா என்ற பெண் தன் தந்தையின் பண்ணையில் புதிதாக தோன்றியுள்ள பிசாசு பிரச்சனையைப் பற்றியும், அதைக் களைய தங்களுக்கு உதவுமாறும், இந்த விஷயம் தன் தந்தைக்கு தெரிய வேண்டாமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறாள். உடனே அவர்களுக்கு உதவ சிஸ்கோ மற்றும் பாஞ்சோ இருவரும் கிளம்புகிறார்கள்.

செல்லும் வழியில் இரவு ஓய்விற்காக பண்ணைக்கு சற்று தொலைவில் இருவரும் வழியில் முகாமிடுகிறார்கள். இரவில் அவர்களின் முகாமில் இருந்து வரும் வெளிச்சத்தை பண்ணையிலிருந்து கண்டு கொள்ளும் ரோமனா உடனே தனியாக கிளம்பி வந்து சிஸ்கோவை சந்திக்கிறாள்.


அவள் இரவில் மட்டும் தோன்றும் பேய்க்குதிரை வீரனைப் பற்றியும் அதனால் பீதியடைந்த பண்ணைக் காவலர்கள் பணியிலிருந்து ஓடிப் போவதையும் பற்றி சிஸ்கோவிடம் விளக்குகிறாள். மேலும் தன் தந்தை மிகவும் கெளரவம் பார்க்கும் பழமைவாதி, உங்களிடம் உதவி கேட்டதை அவருக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறாள். அப்பொழுது தொலைவில் அந்த பேய்க்குதிரை வீரன் தென்பட அதை சிஸ்கோவிடம் காட்டுகிறாள் ரோமனா. ஆனால் சிஸ்கோ கவனிக்கும் முன் அந்த பேய் மறைந்துவிடுகிறது. பின் சிஸ்கோவின் வழித்துணையுடன் யாருக்கும் அறியாமல் மீண்டும் பண்ணையை சென்றடைகிறாள் ரோமனா. ஆனால் ரோமனா தனியே வெளியே சென்று வருவதை ரோமனாவின் தந்தை "பப்பா" மைக்கேலின், "தங்கை மகள்" லிஸா கவனிக்கிறாள்.


மறுநாள் காலை போகும் வழியில் நலம் விசாரித்துச் செல்ல வந்ததாக கூறிக் கொண்டு சிஸ்கோ கிட் "பப்பா" மைக்கேலின் பண்ணைக்கு வருகிறார். அங்கே மைக்கேல் சிஸ்கோவிற்கு லிஸாவை அறிமுகம் செய்து வைக்கிறார். அப்பொழுது லிஸா பேய்க்குதிரை வீரன் பற்றி உளறி விட அதை துப்பு துலக்குவதற்காக சிஸ்கோ கிட் பண்ணையில் தங்குகிறார்.


அன்று இரவு பலரும் பணியிலிருந்து ஓடிய பின்னர் எஞ்சிய இருவருடன், மேலும் சிஸ்கோ மற்றும் பான்ஜோவுடன் இணைந்து மைக்கேல் பண்ணையை காவல் காக்க செல்கிறார். அனைவரும் காவலில் ஈடுபட்டிருக்கையில் அவர்களின் வழியில் குறுக்கிடுகிறது அந்த பேய். பேயை விரட்டியபடி சிஸ்கோ செல்ல பேயால் மருண்ட கால்நடைகள் ஆவேசத்துடன் எதிரே வருகிறது. வேறு வழியில்லாமல் சிஸ்கோ பேயை விரட்டுவதை கைவிட நேர்கிறது. அதேநேரத்தில் கால்நடைகளுக்கிடையே மாட்டிக்கொண்ட மைக்கேலின் உயிரை சிஸ்கோ தன் உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றுகிறார்.



மறுநாள் ஜெர்வின் என்னும் இளைஞன் மைக்கேலின் பண்ணைக்கு பணி கேட்டு வருகிறான். அவனை மிகுந்த கோபத்துடன் விரட்டியடிக்கிறார் மைக்கேல். அவன் மைக்கேலின் முன்னாள் பண்ணை ஊழியன் என்பதும், அவனுக்கும் தன் மகள் ரோமனாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல் பொறுக்காமல் அவனை மைக்கேல் வேலையை விட்டு விரட்டியதையும் பின்னர் அறிகிறார் சிஸ்கோ.




இதற்கிடையே பாலைவனத்தில் ஓர் கொள்ளைக்கும்பல் மைக்கேலின் பண்ணையில் போதுமான காவலர்கள் இல்லாததால் அதைப் பயன்படுத்தி மைக்கேலின் கால்நடைகளைக் கவர்ந்து செல்ல திட்டமிடுகிறது.


சிஸ்கோவிடம் ரோமனா கடிதம் மூலம் உதவி கோரியதை பாஞ்சோ மூலம் அறிந்து கொள்ளும் லிஸா, அச்செய்தியை மைக்கேல் அறியும்படி செய்கிறாள். இதனால் கோபமுறும் மைக்கேல் சிஸ்கோ, பாஞ்சோ இருவரையும் பண்ணையை விட்டு வெளியேற்றுகிறார்.

அன்று இரவு தன் பண்ணையை மைக்கேல் தனி ஆளாக காவல் புரியும் பொழுது கொள்ளைக்கும்பல் அவரை சுற்றிவளைக்க, அப்பொழுது அங்கே வரும் சிஸ்கோ மற்றும் பாஞ்சோ கொள்ளைக்கும்பலை சிதறடிக்கின்றனர். தப்பிச்செல்லும் கொள்ளையர் தலைவனை விரட்டிச்செல்கிறார் சிஸ்கோ. அவனோ ரோமனாவை பணயக்கைதியாக பிடித்துக் கொண்டு சிஸ்கோ, மைக்கேல் உள்ளிட்ட அனைவரையும் துப்பாக்கி முனையில் நிறுத்துகிறான்.

அவன் மைக்கேலை சுட எத்தனிக்கையில் பேய்க்குதிரை வீரன் திடீரென குறுக்கிட கொள்ளையர் தலைவனின் கவனம் திசை திரும்புகிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிஸ்கோ அவனை மடக்குகிறார்.



கொள்ளையர் தலைவனின் பிடியிலிருந்து விடுபட்ட ரோமனா ஓடிச்சென்று பேய்க்குதிரை வீரனை கட்டியணைக்கிறாள். பின் பேய்க்குதிரை வீரன் ஜெர்வின்தான் என்பதும், மீண்டும் பண்ணையில் வேலைக்கு சேரவும், அதன் மூலம் ரோமனாவை கைப்பிடிக்க அவன் அவ்வாறு இரவில் பிசாசாக உலவியதும் வெளிச்சத்திற்கு வருகிறது.

பின் சிஸ்கோவின் அறிவுரையால், தன் வறட்டு கௌரவத்தை துறக்கும் மைக்கேல், ஜெர்வின் மற்றும் ரோமனா இருவரும் இணைய சம்மதிக்கிறார்.



அனைத்தும் சுபமாக முடிய நம் நண்பர்கள் சிஸ்கோ கிட் மற்றும் பாஞ்சோ இருவரும் விடை பெறுகிறார்கள்.

3 comments:

  1. கலக்கிட்டீங்க சௌ!

    ReplyDelete
  2. வெல்கம் பேக் சௌந்தர்.
    மீண்டும் புயலென கிளம்பி உள்ள நீங்கள் மென் மேலும் எங்களை மகிழ்வடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்/வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  3. சூப்பர். படிக்காத ஒரு கதை. கொடுத்ததற்கு நன்றி

    ReplyDelete